சிவகங்கை: கீழடி அகழாய்வுக்கு நிலம் வழங்கியவர்கள் அதற்கான இழப்பீட்டுத் தொகைக் கிடைக்காமல் வருந்துவதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் தமிழக தொல்லியல் ஆய்வாளர்கள் முகாமிட்டு அகழாய்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
அகழாய்வுக்காக கொந்தகையைச் சேர்ந்த 17 பேர் நிலம் வழங்கி உள்ளனர். மேலும், தங்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்புகளுக்கு இடையே உள்ள பகுதியில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றதால், அதற்கு இடையூறாக இருக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதையும் கூட அவ்வப்போது கைவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது அகழாய்வுக்காக தரப்பட்ட நிலம் 17 உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தங்கள் தென்னந்தோப்பை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டு வந்ததுடன் காய்க்கும் திறனையும் அதிகப்படுத்தியுள்ளதாக உரிமையாளர்கள் கூறினர்.
கீழடியில் நிலம் தரக்கூடியவர்களுக்கு உரிய தொகை அளிக்கப்படும் என அரசுத்தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது என்றும் ஜூன் மாதத்துக்குள் இந்த இழப்பீட்டுத் தொகையை நில உரிமையாளர்கள் பெற முடியும் என்றும் அரசுத்தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இந்த உறுதி மொழியை நம்பி அகழாய்வுக்கு நிலம் வழங்கியதால் நில உரிமையாளர்கள் இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் வருந்துவதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் கீழடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், விக்கிரவாண்டி கொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால் நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க முடியவில்லை என்றார்.
அடுத்த இரு வாரங்களில் உரிய தொகை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.