தர்மபுரி: தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனமில்லை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் ஊராட்சி, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் பேசினார்.
“தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையாக இருக்கும் மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களுக்குக்கூட நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனமில்லை. நல்ல குணமில்லை. பாடம் கற்றுக்கொள்வதற்கு நினைப்பும் இல்லை. தங்களின் பத்து வருட காலத்தில் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு பெரிய திட்டமும் செய்யவில்லை.
“ஒன்றிய அரசு என்பது, விருப்பு வெறுப்புகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமான பொதுவான அரசாக செயல்பட வேண்டும் என்பதை இனியாவது அவர்கள் உணர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்,” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
“தி.மு.க.வைப் பொருத்தவரைக்கும் நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். மக்களாகிய நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள். இதுதான் எங்களுடைய வெற்றியின் ரகசியம். இதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ரகசியம்.
“மக்களுக்கு உண்மையாக இருந்து, உண்மையான வளர்ச்சியை உருவாக்குவோம். இந்தியாவின் முதன்மை மாநிலமாக இருக்கின்ற தமிழ்நாட்டை உன்னதமான சிறந்த மாநிலமாக உருவாக்கிக் காட்டுவோம்.
“நான் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல், முதல்வரின் முகவரி துறையின்கீழ் தற்போது வரைக்கும் பெறப்பட்ட, 68 லட்சத்து 30 ஆயிரத்து 281 மனுக்களில் 66 லட்சத்து 25 ஆயிரத்து 304 மனுக்களுக்கு உரிய முறையில் தீர்வு கண்டிருக்கிறோம்.
அதிலும், இந்த தருமபுரி மாவட்டத்தில் மட்டும், 72 ஆயிரத்து 438 மனுக்களுக்கு சாதகமான முறையில் தீர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் உருவானதுதான் இந்த மக்களுடன் முதல்வர் திட்டம்.
“பொதுமக்களின் தனிப்பட்ட கோரிக்கைகளையும் கேட்டு, செயல்படுத்தி கொடுப்பது மூலமாக, எல்லோரும் மனநிறைவு அடையும் ஆட்சியாக நம்முடைய கழக அரசு செயல்பட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்டங்கள் மூலமாக ஒவ்வொரு வீட்டிற்கும், ஏதாவது ஒரு பயன்கிடைக்க அதில் அவர்கள் பயனடைந்து கொண்டு வருகிறார்கள். அதேபோன்று ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலமாக ‘யாருக்கும் எந்தக் குறையும் இல்லை’ என்ற நிலையை உருவாக்க நாங்கள் இப்போது பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்,” என்று திரு ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.