பழனிசாமி: சட்டசபைத் தேர்தல் அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்

பழனிசாமி: சட்டசபைத் தேர்தல் அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்

2 mins read
d1aab004-7546-44c6-b7fd-e9c5ec262cc8
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. ஒன்பது தொகுதியில் 3ஆம் இடத்துக்கும் ஒரு தொகுதியில் 4ஆம் இடத்துக்கும் சென்றது. இந்நிலையில், மக்களவைத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்த கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி திட்டமிட்டார்.

அதன்படி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை (ஜூலை 11) சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அப்போது கட்சி நிர்வாகிகள் பேசும்போது, “இந்தத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்காதது தோல்வி அடைந்ததற்குக் காரணம்,” என்று தெரிவித்தனர்.

இதையடுத்து பேசிய பழனிசாமி, “சிவகங்கை தொகுதியில் நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் 2ஆம் இடத்தையும் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவு வேறு, சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வேறு. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நமக்குச் சாதகமாக இருக்கும். அதை மனதில் வைத்து நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும்,” என்றார்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்