புதுடெல்லி: தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 20 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனக் காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
வியாழக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டத்தின்போது முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
காணொளி வசதி மூலம் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அப்போது, தமிழகத்துக்கு 40 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் எனத் தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதற்கு கர்நாடக மாநில பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் செவிமெடுத்த காவிரி ஒழுங்காற்றுக்குழு, வரும் 31ஆம் தேதிக்குள், தமிழகத்துக்கு 20 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிட்டுள்ளது. இதற்காக நாள்தோறும் ஒரு டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிடலாம் என ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்தது.
எனினும், கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் அம்மாநிலத் தேவைக்காக மட்டுமே உள்ளது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. தற்போதுள்ள சூழலில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்றும் கர்நாடக மாநில பிரதிநிதிகள் வாதிட்டனர்.
எனினும், அத்தகைய வாதங்கள் நிராகரிக்கப்பட்டன. அதன் முடிவில் தமிழகத்துக்கு 20 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் எனக் காவிரி ஒழுங்காற்றுக்குழு இறுதியாகப் பரிந்துரைத்தது.

