விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, அந்தத் தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அத்தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
திமுகவின் அன்னியூர் அ.சிவா, பாமகவின் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் (நாதக) பொ.அபிநயா ஆகியோர் உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இவர்களில் திமுக, பாமக, நாதக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.
முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணித்தது.
புதன்கிழமை பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை (ஜூலை 13) காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 20 சுற்றுகளாக நடைபெற்றது.
இறுதிச்சுற்றுகளின் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 124,053 வாக்குகள் பெற்று 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
தொடர்புடைய செய்திகள்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பொ. அபிநயா 10,602 வாக்குகள் பெற்று வைப்புத் தொகையை (டெபாசிட்) இழந்தார். அவருடன் மேலும் 26 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். நோட்டாவுக்கு 853 வாக்குகள் கிடைத்தன.
சென்ற மாதம் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றிபெற்ற திமுக கூட்டணிக்கு விக்கிரவாண்டி வெற்றி மேலும் தெம்பை அளித்துள்ளது.

