சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சென்னை, மாதவரம் பகுதியில் இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைதாகியுள்ளனர். இவர்களில் திருவேங்கடம் என்பவரது வங்கிக் கணக்கில் கணிசமான தொகை செலுத்தப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அந்தத் தொகை ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக பேசப்பட்ட தொகை என்பதும் உறுதியானது.
இதையடுத்து திருவேங்கடத்திடம் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் தனது வீட்டுக்கு அருகே புதைக்கப்பட்டு இருப்பதாக திருவேங்கடம் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களை பறிமுதல் செய்ய காவல்துறையினர் அவரை புழல் சிறையில் இருந்து அழைத்துச் சென்றனர். எனினும் போகும் வழியில் திருவேங்கடம் காவலர்களின் கவனத்தை திசை திருப்பி தப்பி ஓடி விட்டார்.
காவல்துறையினர் துரத்தியபோது குறிப்பிட்ட இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து அவர் காவலர்களைச் சுட முயன்றதாகவும் தற்காப்புக்காக திருப்பிச் சுட்டதாகவும், காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இத்துப்பாக்கிச் சூட்டின்போது நெஞ்சுப் பகுதியிலும் வயிற்றிலும் சுடப்பட்ட திருவேங்கடம் அந்த இடத்திலேயே சரிந்து விழுந்து இறந்தார்.
ரவுடி திருவேங்கடம் மீது மூன்று கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றுள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளர் தென்னரசு கொலை வழக்கும் அடங்கும்.
இதற்கிடையே, இந்த என்கவுண்டர் சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு பிரமுகர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
திருவேங்கடத்தை காவல் துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் திமுக அரசின் நாடகம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.
ரவுடி திருவேங்கடம் சுட்டுக் கொள்ளப்பட்டது குறித்து தீர விசாரணை நடத்தி உண்மை குற்றவாளியை வெளிக்கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது சந்தேகத்தை எழுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக புதிய காணொளி ஒன்றை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் கைதான 11 பேர், ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக வெட்டிச் சாய்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இக்காட்சிகள் மூலம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்தான் உண்மை குற்றவாளிகள் என உறுதியாகிவிட்டதாகக் காவல்துறை கூறியுள்ளது.