சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் திங்கட்கிழமை (ஜூலை 14) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 8,000 கன அடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரியில் விநாடிக்கு 11,500 கனஅடி வீதம் நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீரை பிலிகுண்டுலுவில் தமிழகத்துக்குத் திறப்பதை கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு அறிவுறுத்தியுள்ள நிலையில் கர்நாடக அரசு இம்முடிவை எடுத்துள்ளது.
‘’பாஜகவினரும் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்றும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவில் மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
“தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு 8,000 கன அடி நீர் திறந்து விட முடிவு செய்துள்ளோம். மழையின் அளவைப் பொறுத்து நீர் திறப்பை அதிகரிப்பது குறித்து முடிவு செய்வோம்,” என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்று கொள்ளாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்துப் பேச நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்துகிறது தமிழக அரசு.
“காவிரி நீர் ஒழுங்காற்று குழு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகிய அமைப்புகளின் தீர்ப்புகளின்படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரை சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடி நீரைப் பெற்றது.
“தற்போது இந்த மாத இறுதி வரை தமிழ்நாட்டிற்கு நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு கர்நாடக அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. ஆணையின்படி நீரை விடுவிக்காத கர்நாடகத்தின் செயல் உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும்,” என்று இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
திங்கட்கிழமை (15.07.2024) நிலவரப்படி கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 75.586 டி.எம்.சி. ஆக உள்ளது. வானிலை மைய அறிக்கையின்படி மழை சரியான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் வெறும் 13.808 டிஎம்சி அளவிற்கு மட்டுமே நீர் உள்ளது. இந்தச் சூழலில், கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும் என்று அவர் கூறினார்.
“என்னால் முடிந்த அளவுக்கு நீண்ட நெடிய காவிரி பிரச்சினையைக் கையாண்டு வருகிறேன். கர்நாடகத்துக்கு உள்ள உரிமையை அவர்கள் கேட்கிறார்கள். தமிழகத்துக்கு உள்ள உரிமையை நாம் கேட்கிறோம். நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்படும். இறுதி முடிவு உச்ச நீதிமன்றத்தின் கையில் தான் உள்ளது,” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

