விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விஜயகரிசல் குளம் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வின்போது சங்கு வளையல்கள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து அகழாய்வு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாக அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
விஜயகரிசல்குளத்தில் நடக்கும் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரை சுடுமண் உருவ பொம்மைகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சங்கு வளையல்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், கண்ணாடி மணிகள், சுடுமண்ணால் ஆன காதணிகள் உள்ளிட்ட சில பொருள்கள் தொடர்ந்து கிடைத்து வருவதாக தெரிவித்தார்.
தற்போது கண்டெடுக்கப்பட்ட மூலப்பொருள்கள் மூலம் அப்பகுதியில் சங்கு வளையல்கள் தயாரிக்கப்பட்டது தெரிய வந்துள்ளதாகவும் தொடர் ஆய்வின் மூலம் மேலும் பல அரிய பொருள்களும் தகவல்களும் தெரிய வரக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், தமிழகத்தில் அகழாய்வுப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.