சசிகலா: மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம்

சசிகலா: மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம்

2 mins read
0da08fe2-7672-4d81-857c-86f64bb666c4
தென்காசி மாவட்டத்தில் நான்கு நாள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ள வி.கே. சசிகலா, அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். - படம்: விகடன்

குற்றாலம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா தமிழகம் முழுவதும் ‘அம்மாவின் வழியில் மக்கள் பயணம்’ என்னும் பெயரில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு மக்களையும் அதிமுக தொண்டர்களையும் சந்தித்துக் குறைகளைக் கேட்டறியப் போவதாகத் தெரிவித்திருந்தார்.

அதையடுத்து, முதற்கட்டமாக தென் மாவட்டங்களில் வியாழக்கிழமை தனது சுற்றுலாப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

அதன்படி, சசிகலா தென்காசி மாவட்டத்தில் நான்கு நாள்கள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். அப்போது பொதுமக்களிடையே உரையாற்றிய அவர், “திமுக அரசு மக்கள் நலத்திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளை மட்டுமே தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டுள்ளது. ஆனால் அந்தத் திட்டங்களில் ஒன்றையும் அது செயல்படுத்தவில்லை. மேலும் தேர்தலுக்கு முன்னதாக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

சுற்றுலாத் தலமான குற்றாலத்திற்குச் செல்லும் சாலை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் வாகனங்கள் செல்வதற்கு ஏற்புடையதாக இல்லை. திமுக அரசு தமிழகத்தின் சாலைகளை சரிப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டும் அங்குள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கான புதிய கட்டடம் திறக்கப்படவில்லை. அதனால் அரசுத்துறை அலுவலகங்கள் பல திருநெல்வேலியிலேயே செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பட்டியலிட்ட அவா், தமிழக அரசு அவற்றை நிறைவேற்ற முனைப்புக் காட்ட வேண்டும் என வலியுறுத்தினாா்.

இவ்வாறு மக்களுக்கு நலத்திட்டங்கள் எவற்றையும் நிறைவேற்றாத இந்த அரசை வீழ்த்தி நாம் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமெனில் அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று சசிகலா கேட்டுக் கொண்டார். நிா்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாகிவிட்டது. எனவே, நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட்டு 2026இல் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் உருவாக்குவோம் என்றார் சசிகலா.

அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா, அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைக்கும் விதமாக இந்தச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.கே.சசிகலா, தனது சுற்றுப்பயணத்தின் போது அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தக்கூடாது என அதிமுகவினர்‌ கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால், அதிமுகவினரின் எதிர்ப்புகளை மீறி, வழிநெடுக இரட்டைஇலைச் சின்னத்துடன் அதிமுக கொடிகள் வரவேற்புக்காக கட்டப்பட்டிருந்தன.

காசிமேஜா்புரம், தென்காசியில் சசிகலாவுக்கு மாபெரும் மாலை அணிவிக்கப்பட்டது. கீழப்புலியூா், மேலப்பாட்டாகுறிச்சி, சுந்தரபாண்டியபுரம், திருச்சிற்றம்பலம், மேலப்பாவூா், பாவூா்சத்திரம், கீழப்பாவூா் உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்