சிவகங்கை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது பருவமழை பெய்து வருவதால் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, தென்காசி மாவட்டம் திருமலாபுரம், திருப்பூர் மாவட்டம் கொங்கல் நகரம், கடலூர் மாவட்டம் மருங்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்நானூர் உள்ளிட்ட எட்டு இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, புதுகோட்டை மாவட்டம் பொற்பனைகோட்டை ஆகிய மூன்று இடங்களிலும் ஏற்கெனவே அகழாய்வுப் பணி நடந்து வருகிறது.
அந்த இடங்களிலும் கடந்த மாதம் முதல் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. ஆய்வுக்காக பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. தற்போது மழை பெய்து வருவதால் அந்தப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழி தோண்டும் பணியில் தினக்கூலி அடிப்படையில் உள்ளூர் மக்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த தினக்கூலிகள் மழை முழுவதும் நின்ற பிறகே பணிக்கு மீண்டும் வருவர் என்று கூறப்படுகிறது.
“திடீர் மழையால், குழி தோண்டும்போது, மண்ணில்ல் புதைந்துள்ள பொருள்கள் முற்றிலுமாகச் சிதைந்துவிட்டால் கால அடுக்குகளை அடையாளப்படுத்த முடியாமல் போய்விடும் என்றும் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
“முன்பே தோண்டப்பட்ட ஆய்வுக்குழிகளை மூடி வைக்க அகழாய்வு குழுவினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. எனவே, ஒரே சமயத்தில் ஏராளமான குழிகளைத் தோண்டி ஆய்வு மேற்கொள்ளாமல் முன்பே தோண்டப்பட்ட குழிகளில் ஒவ்வொரு குழியாக ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
“வெம்பக்கோட்டை பகுதியில் இந்த அடிப்படையில்தான் தற்போது அகழாய்வு நடந்து வருவதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
[ο]சங்ககால பானை ஓடுகள் கண்டெடுப்பு:
இதற்கிடையே கடலூர் மாவட்டத்தில் உள்ள மருங்கூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வின்போது சங்ககால பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.
இவை சங்ககாலம் எனப்படும் துவக்க வரலாற்றுக்காலத்தை சேர்ந்தவை என்று தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் மருங்கூர் பகுதி துவக்க வரலாற்று காலத்தை சார்ந்த தொல்லியல் தலம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

