தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்துக்கு ஏமாற்றம்: எதிர்க்கட்சித் தலைவர்கள்

3 mins read
336b55d9-9ea3-4077-a874-1879a57c402c
இந்தியாவின் 2024 -25ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: இந்தியாவின் 2024 -25ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படாதது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டத்தை செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) தாக்கல் செய்தார். அவரது ஒன்றரை மணி நேர உரையில் தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தைகள் ஒருமுறைகூட இடம்பெறவில்லை. தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என தமிழகத்தின் அரசியல் தலைவர்கள், கவனிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு முறையும் திருக்குறள், தமிழ்ச் செய்யுள்களை மேற்கோள் காட்டி வரவுசெலவுத் திட்டத்தைப் படிக்கும் நிர்மலா சீதாராமன், இம்முறை அப்படி எதையும் மேற்கோள் காட்டவில்லை.

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு போதிய திட்டங்களை அறிவிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

“வெள்ளத் தடுப்பு பணிகளுக்கும் பீகார், அஸ்ஸாம், ஹிமாச்சல் பிரதேஷ், உத்திரகாண்ட், சிக்கிம் போன்ற மாநிலங்களுக்கே பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்கள் எதுவும் தமிழகத்திற்கு அறிவிக்கப்படாதது ஒரு பெருத்த ஏமாற்றமாகும்.

“மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் அளித்த பல வாக்குறுதிகள் இந்த வரவு, செலவுத் திட்ட அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.

“நிதிநிலை அறிக்கையில், சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான பழைய வருமானவரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாததும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாததும் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் குறித்தும் எந்த அறிவிப்பும் செய்யப் படாதது ஏமாற்றம் அளிக்கிறது,” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

“இது தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் நிதிநிலை அறிக்கையா அல்லது ஆந்திரா, பிஹார் மாநில நிதிநிலை அறிக்கையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசை காப்பாற்றுவது நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும்தான். அதனால் அவர்கள் விடுத்த கோரிக்கைகளின் அடிப்படையில் பிஹார் மாநிலத்துக்கு ரூபாய் 26 ஆயிரம் கோடி நிதியும், ஆந்திர மாநிலத்துக்கு ரூபாய் 15 ஆயிரம் கோடி சிறப்பு நிதியாக நிர்மலா சீதாராமன் வாரி வழங்கியிருக்கிறார்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தாம்பரம் - செங்கல்பட்டு விரைவுச்சாலை திட்ட ஒப்புதல், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் போன்றவையும் இடம்பெறவில்லை.

மத்திய அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் தான் நிதி ஒதுக்கீடுகள் அமைய வேண்டும். ஆனால், தங்களது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பாரபட்சமாக நிதி ஒதுக்குவது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற செயலாகும். நீண்டகாலமாக அனைத்து நிலைகளிலும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்று எழுப்பப்பட்ட கண்டன குரலுக்கு எந்த வகையிலும் செவி மடுக்காத ஒரு நிதிநிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்திருக்கிறார் என்று கு.செல்வப்பெருந்தகை சாடியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்