சென்னையில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு கொசு இனப்பெருக்கமே முக்கிய காரணம்

2 mins read
3a96e62d-5dcd-4a8f-83b1-d6cb71aac0df
திருவொற்றியூர், மணலி மண்டலங்களில் தினமும் குடிநீரின் தரம் பரிசோதிக்கப்படுகிறது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக வெப்பநிலை மாறியுள்ளது. இதனால் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவை பரவி வருகின்றன. தொண்டை வலி, இருமலுடன் தாக்கும் இந்த மர்ம காய்ச்சல் சென்னையில் பரவுவதற்கு கொசு இனப்பெருக்கமே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

மேலும் சென்னையில் சில இடங்களில் டெங்கி காய்ச்சலும் பரவி வருகிறது. கோடம்பாக்கம் மண்டலத்தில் 8 மாதக் குழந்தை, 8 வயது சிறுவன் ஆகியோருக்கு டெங்கி பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களிலும் சிலருக்கு டெங்கி பாதிப்பு இருக்கிறது.

சென்னையில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களிலும், தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளிலும் பலருக்கு சளி, இருமலுடன் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்தவும், பருவமழை தொடங்க உள்ள நிலையில் சுகாதாரப் பணிகளை முடுக்கி விடவும், சென்னை மாநகராட்சி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆலந்தூர், பெருங்குடி மண்டலங்களில் வாரத்திற்கு ஒருமுறை குடிநீரின் மாதிரி சேகரிக்கப்பட்டு அதில் பாக்டீரியா, வைரஸ் தொற்று இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

திருவொற்றியூர், மணலி மண்டலங்களில் தினமும் குடிநீரின் தரம் பரிசோதிக்கப்படுகிறது. அண்ணாநகரிலும் அவ்வப்போது பரிசோதனை செய்யப்படுகிறது. ஆவடியில் 3 மாதங்களுக்கு ஒருமுறையும் குடிநீரில் கழிவுநீர் கலந்து இருக்கிறதா என ஆய்வு செய்யப்படுகிறது.

அதற்கு ஏற்றபடி குடிநீர் வாரியத்துடன் இணைந்து குடிநீர்த் தொட்டிகள் சுத்தப்படுத்தப்பட்டு, தேவையான அளவு குளோரின் கலந்து, சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னையில் கொசுக்கள் இனப்பெருக்கம் அதிகரித்து வரும் பகுதிகளில் கொசு ஒழிப்பு புகை அடிப்பது உள்ளிட்ட பணிகளும் மாநகராட்சி மூலம் நடந்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்