சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு வணிகர்கள் நல வாரியக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அங்கு பேசிய அவர், “வணிகர்கள் நலனுக்காக திமுக ஆட்சி காலங்களில் எண்ணற்ற உதவிகளை வழங்கியுள்ளோம். வணிகர்களுக்காக ரூ.3.29 கோடி நிதி வழங்கியுள்ளோம். வணிக உரிமங்களை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும் என்று திருத்தியுள்ளோம். வணிகர்கள் வர்த்தக மனப்பான்மையின்றி சேவை உள்ளத்துடன் செயல்பட வேண்டும்.
“வணிகர்களுக்கும் அரசுக்கும் இடையே இடைத்தரகர்கள் இருக்கக் கூடாது. நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள கடைகளுக்கான குத்தகைக் காலம் 12 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க முன்வர வேண்டும். தமிழ்நாட்டின் வீதிகளில் தமிழைக் காணவில்லை என யாரும் சொல்லக்கூடாது.
“வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் உயிரிழந்தால், வழங்கப்படும் நிதி ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும். வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 88,209 ஆக அதிகரித்துள்ளது,” என்று அவர் கூறினார்.

