கடலூரில் கணவர் ஆட்சியர், மனைவி மாநகராட்சி ஆணையர்

கடலூரில் கணவர் ஆட்சியர், மனைவி மாநகராட்சி ஆணையர்

2 mins read
bff483c8-4ce0-4bbc-8a81-4c5021c8842e
கடலூர் மாநகராட்சி ஆணையாளராக ஐ.ஏ.எஸ்.பொறுப்பில் உள்ள அனு என்பவரை தமிழக அரசு நியமனம் செய்தது. - படம்: தமிழக ஊடகம்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் முதல்முறையாக ஆட்சியர் தம்பதிக்கு வாழ்த்துகளைச் சொல்லி வருகிறார்கள்.

தமிழகத்தில் பெரிய நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்களின் கோரிக்கையாகவே இருந்து வருகிறது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளை தரம் உயர்த்துவது குறித்து ஆய்வு செய்வதற்காகவே பிரத்தியேகக் குழு அமைக்கப்பட்டு, நகராட்சிகள், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கடலூர் நகராட்சியாக இருந்து வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலில், கடலூர் மாநகராட்சியில் முதல் பெண் மேயராக சுந்தரி ராஜா பதவி ஏற்றார். இதற்குப் பிறகு, கடலூர் நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்பட்டதால் ஆட்சியர் பொறுப்பில் உள்ளவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பலர் ஆணையாளராக நியமிக்கப்பட்டனர். அதன்படி கடந்த ஆணையராக காந்திராஜ் பொறுப்பில் இருந்து வந்தார். இப்படிப்பட்ட சூழலில்தான், திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் மாநகராட்சிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி, கடலூர் மாநகராட்சி ஆணையாளராக ஐ.ஏ.எஸ்.பொறுப்பில் உள்ள அனு என்பவரை தமிழக அரசு நியமனம் செய்தது.

அந்தவகையில், கடலூர் மாநகராட்சிக்கு முதல் முறையாக ஐஏஎஸ் பொறுப்பில் உள்ள அனு நியமிக்கப்பட்டுள்ளார். இதில் இன்னொரு சிறப்பும் அடங்கியிருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் ஆட்சியராக இருந்த அருண் தம்புராஜ் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிய ஆட்சியராக சிபி ஆதித்யா செந்தில்குமார் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். கடந்த 19ஆம் தேதி சிபி ஆதித்யா பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவரது மனைவி அனு, கடலூர் மாநகராட்சியிலேயே, புதிய ஆணையாளராக தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அதாவது கடலூரில் கணவர் ஆட்சியராகவும், மனைவி மாநகராட்சி ஆணையராகவும், ஒரே இடத்தில் பணிபுரிவது இதுவே முதல் முறையாகும். இதனால் கடலூர் மக்கள் மகிழ்ச்சியுடன் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

முதல்முறையாக பெண் ஐஏஎஸ் அதிகாரியான அனு, தற்போது மாநகராட்சி ஆணையாளராகப் பொறுப்பேற்கிறார். இவர் ஏற்கெனவே தமிழக அரசின் துணைச் செயலாளராகப் பதவி வகித்து வந்தவர்.

குறிப்புச் சொற்கள்