தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நவாஸ்கனி: நிதிநிலை அறிக்கையில் தமிழையும் தமிழகத்தையும் காணோம்

2 mins read
2ae85c98-3903-4e1d-bc13-325a8609aed1
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ்கனி. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: “மத்திய அரசின் 2024-2025 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பாரதிய ஜனதா கட்சி, ஆட்சியைப் பாதுகாக்கும் அரசியலை வெளிப்படுத்துகிறதே தவிர, நாட்டு நலனையும், நாட்டு மக்களின் நலனையும் முன்னிறுத்தவில்லை.

பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் சிறப்புத் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டு, தமிழகம் உள்ளிட்ட பெரும்பான்மை மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன என்று கூறியுள்ளார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் திரு கே. நவாஸ்கனி.

“மத்திய நிதியமைச்சர் இதுவரை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகளில் தமிழ் நாட்டுக்கான நலத்திட்டங்கள் எதுவும் இல்லாமல் இருந்தால்கூட தமிழும் தமிழகமும் இடம்பெற்றிருக்கும். ஆனால், அதைக்கூட இப்போதைய நிதிநிலை அறிக்கையில் அவர் தவிர்த்து விட்டார்.

மேற்கோள் காட்டுவதற்கு வழக்கமாக பயன்படுத்தப்படும் திருக்குறள் உட்பட அனைத்தையும் நிதியமைச்சர் தவிர்த்து இருக்கிறார்.

இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை நிதி, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயிலுக்கான நிதி உட்பட தமிழகத்திற்காக எதுவும் குறிப்பிடாமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து தமிழ் நாட்டைப் புறக்கணித்துவரும் பாஜகவை, தமிழக மக்களும் தொடர்ந்து புறக்கணிப்பார்கள்,” என்று கே.நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.

இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு என்று எந்தவொரு நலத் திட்டமும் இல்லாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இது தமிழகத்தின் மீதான மத்திய அரசின் மாற்றான் தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

வழக்கம்போல சிறுபான்மையினர் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களுக்கும் இந்த பட்ஜெட்டின் மூலம் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது பாஜக அரசு என்று கூறியுள்ளார் திரு கே.நவாஸ்கனி.

குறிப்புச் சொற்கள்