தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழக அமைச்சருடன் வெளிநாட்டு அமைச்சர் நடைப்பயிற்சி

2 mins read
737cffec-4904-41c1-a41d-5ec8f60664a4
சென்னைக்கு வருகை புரிந்துள்ள ஐக்கிய அரபு சிற்றரசின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல்மர்ரி மற்றும் அவருடன் வந்திருந்த உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் தமிழ் நாட்டின் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இணைந்து நடைப்பயிற்சியில் ஈடுபட்ட பின்னர் ஒரு பூங்காவில் உள்ள சிலையருகே புகைப்படம் எடுத்துக்கொண்டனர். - படம்: சமயம்

சென்னை: பெசன்ட் நகரில் உள்ள ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹெல்த் வாக்’ 8 கி.மீ தடத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுடன் இணைந்து ஐக்கிய அரபு சிற்றரசின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல்மர்ரி நடைப்பயிற்சியில் கலந்து கொண்டார்.

ஐக்கிய அரபு சிற்றரசின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல்மர்ரி அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டு தமிழகம் வந்துள்ளார். சென்னை வந்த அமைச்சர் அப்துல்லா, தொழில்துறை முதலீடுகள் தொடர்பாக நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவுள்ளார்.

முன்னதாக, ஐக்கிய அரபு சிற்றரசின் அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “வர்த்தக மேம்பாட்டுப் பணிகளுக்காக தமிழ் நாட்டுக்கு வந்துள்ளேன். அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறந்த ஓட்டப்பந்தய வீரர். அவருடன் இணைந்து நடைப்பயிற்சி மேற்கொள்ள உள்ளேன். நடைப்பயிற்சி உடல் நலத்திற்கு சிறந்தது,” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஐக்கிய அரபு சிற்றரசைச் சேர்ந்த பொருளாதார அமைச்சர் கடந்த 22ஆம் தேதி தமிழகம் வந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அதையடுத்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவும் சந்தித்து தொழில் துறைகள் மற்றும் தொழில்சார்ந்த ஒப்பந்தங்கள் குறித்து கலந்துரையாடினர். அமைச்சர் அப்துல்லாவுடன் 50க்கும் மேற்பட்ட தொழில் முதலீட்டாளர்களும், ஐக்கிய அரபு சிற்றரசு அதிகாரிகளும் வந்துள்ளனர் என்றார்.

தமிழ் நாட்டின் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகையில், “ஐக்கிய அரபு சிற்றரசின் உயர்நிலைக் குழுவுடன், தொழில்துறையை மேம்படுத்துவது குறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 30க்கு மேற்பட்ட அரபு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யும் என்று கூறப்படுகிறது. எவ்வளவு முதலீடு செய்யப்படும் என்பது பின்னர் தெரியும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு சிற்றரசில் இருந்து தமிழ் நாட்டில் எவ்வளவு முதலீடு செய்யப்படும் என்பது பின்னர் தெரியும் என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்