பழனி: கீரனூரில் இருந்து பழனிக்குச் சென்று கொண்டிருந்தது தமிழக அரசின் நகரப் பேருந்து. அந்தப் பேருந்து நரிக்கல்பட்டி என்னும் பகுதியை அடைந்தபோது, பலத்த காற்று வீசியது. அந்தக் காற்றுக்கு ஆட்டம் கண்ட பேருந்தின் கூரை அப்படியே தனியாகக் கழன்று தொங்கியது. இதைக் கண்டதும் பயணிகள் பதற்றத்தில் அலறினர். இதனையடுத்து பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மாற்றுப் பேருந்தில் பழனிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தின் பழனி வட்டாரத்தில், கடந்த சில நாள்களாக தொடர்ந்து சூறாவளிக் காற்று வீசுகிறது. அதையடுத்து அந்த வட்டாரத்தின் பல பகுதிகளில் ஏராளமான மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்து சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 15 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.

