சென்னை: தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு ரூ.401 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
‘புதுமைப்பெண்’ திட்டம் போன்று ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் 2024 ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ரூ.401 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.1,000 வழங்கப்படும். அவர்களின் வங்கிக் கணக்குகளில் அத்தொகை வரவுவைக்கப்படும்.
இத்திட்டத்தால் ஏறக்குறைய 328,000 மாணவர்கள் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்மூலம் எப்படிப் பயன்பெறுவது என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலமொழி வழியாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழி படித்துள்ள மாணவர்கள் தங்களின் இளங்கலை பட்டம், தொழிற்பயிற்சி, பட்டயக் கல்வி ஆகியவற்றைப் பெறும் காலம்வரை ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்துகிறது.
அதன்படி, ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் முழுமையாக மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படுவதால் இத்திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கல்வி நிறுவனங்கள், தகுதியான மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்தகவலை அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்கும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி, மாணவர்கள் அருகிலுள்ள ஆதார் மையங்களில் ஆதார் அட்டை பெற பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அப்பகுதியில் ஆதார் மையம் இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதார் மையம் அமைத்து, அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.