தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வலியுறுத்தும் அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்ட 1,500க்கும் அதிகமான ஆசிரியர்கள் கைது

2 mins read
230d5268-55f4-493b-95c6-0d28a5b67a5b
சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயற்சி செய்த 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: சென்னை டிபிஐ வளாகத்தில் (பேராசிரியர் அன்பழகன் வளாகம்) திங்கட்கிழமை (ஜூலை 29) காலை போராட்டத்தில் ஈடுபட்ட 1,500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

ஆசிரியர்கள் அந்த வளாகத்தை நெருங்குவதற்கு முன்பாக அதன் அருகேயுள்ள பஸ் நிறுத்தத்திலேயே கைதுசெய்யப்பட்டு காவல்துறை வாகனங்களில் ஏற்றிச்செல்லப்பட்டனர். போராட்டத்தில் பங்கேற்பதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி அருகேயுள்ள லயோலா கல்லூரி பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்களைச் சரிசெய்தல், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்குதல், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அனுமதி உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் கடந்த 60 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையை மாற்றும் வகையிலும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான முன்னுரிமை, பதவி உயர்வை பாதிக்கும் வகையிலும் பள்ளிக் கல்வித்துறை சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 243-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள். - படம்: தமிழக ஊடகம்

“ஆசிரியர்களை இவ்வாறு முன்கூட்டியே கைது செய்வது ஜனநாயக விரோதமானது. கடந்த முறை 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தியபோது 12 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தொடக்கக்கல்வி இயக்குநர் உறுதி அளித்தார். ஆனால், இன்றுவரை அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. தற்போது அரசாணை 243-ஐ ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்த்து 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கியுள்ளோம்,” என்று கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் கூறினர்.

“இந்த அரசாணையால் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியைகள். எனவே, அரசாணை 243-ஐ உடனடியாக ரத்துசெய்வதுடன் இதர கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்,” என்று அவர் கூறினர்.

ஆசிரியர்கள் கைதுக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என்றும், இடை நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும், ஆண்டுதோறும் ஆசிரியர்களின் போராட்டம்தான் தொடர்கிறதே தவிர, அவர்களுக்கான தீர்வு எட்டப்படவில்லை. அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அவர் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்