சென்னை: வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது, சொந்தமாக வீடு கட்டி வாழ வேண்டும் என்று கனவு காணும் ஏழைகளையே பெரிய அளவில் பாதிக்கும் என்று அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு உடனடியாக இந்தச் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற்று, பழைய கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தி.மு.க. அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற 38 மாதங்களில் மூன்று முறை மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இருமடங்கு வீட்டுவரி மற்றும் சொத்துவரியை உயர்த்தியுள்ளது. பலமுறை பால் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. பல மடங்கு சொத்துப் பத்திரப் பதிவுக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. தமிழக அரசின் வரிச்சுமையால் கட்டுமானப் பொருள்களின் விலைகளும் பன்மடங்கு உயர்ந்துள்ளன என்று எடப்பாடி பழனிசாமி திமுக அரசை சாடியுள்ளார்.
கால் காணி நிலத்தையாவது சொந்தமாக்கிக் கொள்ளலாமா என்று ஏங்கும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் தலையில், கடந்த ஆண்டே நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்வு, அனைத்து பதிவுக் கட்டணங்களும் பலமடங்கு உயர்வு என்ற இடியை இறக்கியது தி.மு.க. அரசு.
இப்போது வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தி ஏழை எளியவர்கள் சொந்தமாக வீடு கட்டி வாழ்வதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது இந்த அரசு என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.