சென்னை: சென்னை மாநகராட்சிக்கு வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் தொழில்வரி, வணிக நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டு உள்ளன.
சென்னையில் 2018ல் ஆண்டு தொழில்வரி திருத்தி அமைக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது தொழில்வரி உயர்த்தப்பட்டுள்ளது. அரையாண்டுக்கான தொழில்வரி 35% வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதன்மூலம் சென்னை மாநகராட்சிக்கு கூடுதலாக ரூ.100 கோடி வருவாய் கிடைக்கும். அதே நேரத்தில் இந்தக் கட்டண உயர்வால் 200க்கும் மேற்பட்ட தொழில்கள் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
விருந்தினர் இல்லங்கள், சேவை அடுக்குமாடிக் குடியிருப்புகள், தங்கும் விடுதிகள், ஓய்வு விடுதிகள் ஆகியவற்றுக்கு இதுவரை கட்டணம் கிடையாது. இனி இவற்றுக்கு ஆண்டுக்கு 1,000 சதுர அடிக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் இதில் தங்குவதற்கான வாடகை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
மேலும் 5 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள திருமண மண்டபங்களுக்கு இதுவரை ஆண்டுக் கட்டணம் ரூ.4 ஆயிரமாக இருந்தது. அது இனி ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதனால் இனி திருமண மண்டப வாடகையும் அதிகரிக்கும். டீக் கடைகள், காபிக்கடைகள், உணவகங்கள், உணவு சாப்பிடும் மெஸ்கள் ஆகியவற்றுக்கு 1,000 சதுர அடிக்கு இதுவரை ரூ.2,500 ஆக இருந்த கட்டணம் இனி ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதுவே 5 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள இடங்களுக்கு இதுவரை ரூ.10 ஆயிரமாக இருந்த கட்டணம் இனி ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
வாகன நிறுத்தக் கட்டணம் புதிதாக வசூலிக்கப்பட உள்ளது.
சலூன்களுக்கு உரிமக் கட்டணம் ரூ.200 முதல் ரூ.10 ஆயிரம் வரையும், அழகு நிலையங்களுக்கு ரூ.500 முதல் ரூ.6 ஆயிரம் வரையும் உயர்த்தப்படுகிறது. ஸ்பாக்களுக்கு ரூ.25 ஆயிரம் உரிமக்கட்டணம் உள்ளது.
செல்போன் கடைகள், புகைப்பட ஸ்டூடியோக்கள், சிறிய கடைகள் ஆகியவற்றுக்கு வருடாந்திர உரிமக் கட்டணம் ரூ.3 ஆயிரமாக உள்ளது. மேலும் ஓட்டல்கள், பேக்கரிகள், சினிமா தியேட்டர்கள், தங்கு விடுதிகள், சலவைக் கடைகள், சந்தைகளுக்கு உரிமத்தை புதுப்பிக்கவும், ரத்து செய்யவும் மாநகராட்சி ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் கட்டண உயர்வின் காரணமாக பல தொழில்கள் முடங்கும் நிலை ஏற்படும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கட்டண உயர்வு காரணமாக வியாபாரிகள், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

