சென்னை: குட்கா விற்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் திமுக அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட 21 பேருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தடையை மீறி குட்கா விற்கப்பட்டது தொடர்பாக டெல்லி சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கின் உரிமையாளர்களான மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவகுமார் ஆகிய 6 பேருக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் அதிமுக அமைச்சர்கள், மத்திய - மாநில உயர் அதிகாரிகளுக்கு எதிராக கடந்த 2022ஆம் ஆண்டில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிகை முழுமையானதாக இல்லை என்று கூறி அதை முழுமையாக தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
21 பேர் மீது குற்றச்சாட்டு
அதன்படி திருத்தம் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. அதில், ஏற்கெனவே கைதான 6 பேருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளான டி.கே.ராஜேந்திரன், காவல்துறை முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என மொத்தம் 21 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நீதிபதி சி.சஞ்சய் பாபா இந்த வழக்கை விசாரித்தார்.
அப்போது, இந்த வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்துள்ள கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், உமா சங்கர், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய அரசு அதிகாரி நவநீதகிருஷ்ணன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய ஐந்து பேர் மட்டும் விசாரணைக்கு வந்திருந்தனர்.
செப்டம்பர் 9ஆம் தேதி விசாரணை
“இந்த வழக்கில் 21 பேர் மீது கூடுதலாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளான டி.கே.ராஜேந்திரன், எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட அனைவரும் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நீதிமன்றத்திற்கு நேரில் வரவேண்டும்,” என உத்தரவு பிறப்பித்துள்ளார்.