சென்னை: திருவல்லிக்கேணியில், பார்த்தசாரதி கோயில் சார்பில் ரூ.3.41 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய வணிக வளாகங்கள் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளன.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்குகள் நடத்துதல், திருக்குளங்களை சீரமைத்தல், தேர்களை புனரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருவதோடு, கோயில்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் அவற்றிற்கு சொந்தமான இடங்களில் வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பக்தர்கள் தங்கும் விடுதிகள் போன்றவை கட்டப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குச் சொந்தமான 18 இடங்களில் இருந்த சிதிலமடைந்த வாடகைக் குடியிருப்புகளை அகற்றி, ரூபாய் 15 கோடி செலவில் அங்கு புதிய வணிக வளாகம், குடியிருப்புகள், வாகன நிறுத்துமிடம் கட்ட திட்டமிடப்பட்டது.
அதனடிப்படையில் திருவல்லிக்கேணி, துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் ரூ. 3.22 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம், பொன்னப்பன் சந்தில் ரூ.19.45 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் என மொத்தம் ரூ.3.41 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு வணிக வளாகங்களை இளையர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை (ஆகஸ்ட் 7) திறந்து வைத்தார்.