சென்னை: தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் மறைந்த தலைவருமான கலைஞர் கருணாநிதியின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, கட்சித் தொண்டர்களும் அரசியல் பிரமுகர்களும் அவரை நினைவுகூர்ந்தனர். அதில் குறிப்பாக பல இடங்களில் திமுகவினர் அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர்.
சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி சிலைக்குக் கீழே வைக்கப்பட்ட உருவப்படத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து சென்னை வாலஜா சாலையிலிருந்து கலைஞர் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்தினர். இதில் திமுகவை சேர்ந்த பல முக்கியத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பட்டியலிட்டு வரலாற்றைச் சொன்னால் கலைஞரின் பெயர் “உயர்ந்து நிற்கும்; உயிரென நிற்கும்” என முதல்வர் ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.