காரைக்குடி: பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறை உதவி ஆய்வாளர் உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடி கற்பக விநாயகர் நகர் பகுதியில் உள்ள சோமசுந்தரம் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை, அதே பெயரைக் கொண்ட இன்னொருவருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறையாக விசாரணை செய்யாமல் தடையில்லா சான்று வழங்கியதாக காவல் உதவி ஆய்வாளர் கலைமணி மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தச் சான்றிதழை வைத்து அதிகாரப் பத்திரம் பதிவுசெய்து அதன் மூலம் அந்த நிலத்தை சோமசுந்தரம் என்பவர் விற்பனை செய்துள்ளார். இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர், சார் பதிவாளர், நிலத்தை விற்ற, சோமசுந்தரம் மற்றும் வாங்கியவர் உள்பட 11 பேர் மீது சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்குடியில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2023 ஜூன் மாதம், காரைக்குடி, சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த 91 வயது கருப்பன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இரண்டு சார்-பதிவாளர்கள் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்சி - இராமேஸ்வரம் நெடுஞ்சாலையையொட்டி இரண்டு சர்வே எண்களில் இருந்த திரு கருப்பனின் 5.6 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியை யாரோ ஒருவர், போலியாகப் பத்திரப் பதிவு செய்து விற்பனை செய்துள்ளார்.