சென்னை: சென்னை அருகே தீமிதித் திருவிழாவில் ஏழு வயது சிறுவன் தீயில் விழுந்து படுகாயமடைந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டியை அடுத்து உள்ள எளாவூா் காட்டுக்கொல்லைமேடு கிராமத்தில் சக்தி மாரியம்மன் திருக்கோயில் உள்ளது.
அந்தக் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவுபெற்றதை ஒட்டியும் ஆடித் திருவிழாவை முன்னிட்டும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) தீமிதித் திருவிழா நடத்தப்பட்டது.
அதற்காக, ஏறக்குறைய 100 பக்தர்கள் காப்புக் கட்டி 11 நாள் விரதம் இருந்து தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்த காத்திருந்தனர்.
நேர்த்திக்கடன் செலுத்துவது தொடங்கியதும், பக்தர்கள் ஒவ்வொருவராகத் தீமிதித்து ஓடினர்.
அப்போது, காட்டுக்கொல்லை மேடு கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் என்பவர் தனது ஏழு வயது மகன் மோனிஷைத் தூக்கிக் கொண்டு தீக்குழியில் இறங்கினாா்.
ஓடத் தொடங்கியபோது நெருப்பின் சூடு தாங்காமல் நிலை தடுமாறிய சிறுவன், தீக்குழியிலேயே விழுந்தான். மணிகண்டனும் சேர்ந்து கீழே விழுந்தார்.
மணிகண்டனுக்கு லேசான தீக்காயமும் சிறுவன் மோனிசுக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
அந்தச் சிறுவனை காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவனது உடலில் 40 விழுக்காடு தீக்காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இச்சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
சிறுவன் தீக்குழியில் விழுவதைக் காட்டும் காணொளி ஊடகங்களில் வெளியானது. தீக்குழியைக் கண்டு சிறுவன் அஞ்சுவதும் காவல்துறை அதிகாரி ஒருவரும் அருகில் இருந்தவர்களும் அவனைத் தேற்றி தீக்குழியில் இறங்குமாறு கூறினர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் சிறுவனைத் தூக்கிக்கொண்டு அவனது தந்தை தீக்குழியில் இறங்கியது காணொளியில் தெரிந்தது.