தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுதந்திர தின அதிபர் விருந்து: பசுமைப் போராளி யோகநாதனுக்குச் சிறப்பு

2 mins read
02dc0fd3-7b27-45b7-9c20-bcc16289621a
மரங்கள் நட்டு பசுமையைப் பேணும் பேருந்து நடத்துநர் யோகநாதன். - படம்: தமிழக ஊடகம்

கோயம்புத்தூர்: டெல்லி அதிபர் மாளிகையில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) நடைபெறும் 78வது சுதந்திர தின விழாவையொட்டி நடைபெற உள்ள விருந்தில் தமிழகத்தின் பசுமைப் போராளி யோகநாதன் சிறப்பிக்கப்படுகிறார்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மருதமலை கிளையில் பேருந்து நடத்துநராக பணியாற்றிய திரு யோகநாதன், கிட்டத்தட்ட 36 ஆண்டுகளாக மரங்களைப் பாதுகாக்கும் பெரும் பணியைச் செய்து வருகிறார்.

தனது பணிக்கு நிகரான நேரத்தையும், தனது ஊதியத்தின் ஒரு பகுதியையும் மரங்கள் வளர்ப்பிற்குச் செலவிட்டு வருகிறார்.

பொது இடங்கள், அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட இடங்களில் 600,000 மேற்பட்ட மரங்களை நட்டிருப்பதுடன், தொடர்ந்து அவற்றை பராமரித்தும் வருகிறார். மேலும், விதை நேர்த்தி, மரம் நடுதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இலவசமாக மரக்கன்றுகளை வழங்குதல், அரிய வகை அழிந்து வரும் மரங்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இயற்கை சார்ந்த இவரது பணிகளைப் பாராட்டி யோகநாதனுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டில் ‘பசுமைப் போராளி’ விருதினை, அப்போதைய துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி வழங்கி கெளரவித்தார்.

தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருது, பெரியார் விருது, டிம்பர் லேண்டின் மர மனிதன் விருது, மத்திய நீர்வளத்துறை காலநிலை போர்வீரர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். அத்துடன், 2015ஆம் ஆண்டில் சிபிஎஸ்இ ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இவரைப் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

புற்றுநோய்ப் பாதிப்புக் காரணமாக தற்போது நடத்துநர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு அலுவலகப் பணியில் ஈடுபட்டு வருகிறார். பசுமைப்புரட்சியில் இவரது சாதனையைப் பாராட்டும் வகையில் இந்தியாவின் 78வது சுதந்திர தின விழாவில், இவரை இந்திய அதிபர் நேரில் அழைத்து கெளரவப்படுத்த உள்ளார்.

குறிப்புச் சொற்கள்