குறைந்த விலையில் மருந்துகள் வழங்க ‘முதல்வர் மருந்தகம்’

2 mins read
d6194196-e738-4504-94a5-e577389f37e7
சென்னையில் நடைபெற்ற இந்தியாவின் 78ஆவது சுதந்திர தின விழா நிகழ்வில், காவல்துறையின் மரியாதையை ஏற்றுக்கொண்டார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். - படம்: எக்ஸ் / மு.க. ஸ்டாலின்

சென்னை: குறைந்த விலையில் மருந்துகள் வழங்கும் முதல்வர் மருந்தகம் திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அத்திட்டம் 2025 பொங்கல் திருநாள் முதல் செயல்படுத்தப்படும் என்றும் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 78ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை முதல்வர் ஏற்றினார். பின்னர் உரையாற்றிய அவர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

“தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்குத் தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதால், அவர்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுகின்றன.

“இதனையடுத்து, பொதுவான மருந்துகளும் பிற மருந்துகளும் மக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டம் பொங்கல் திருநாள் முதல் செயல்படுத்தப்படும்.

“அத்திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். அத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு, மானிய உதவியாக அரசு ரூ.300,000 வழங்கும்,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னாள் இராணுவ வீரர்களுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இத்திட்டம் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு 30% மூலதன மானியமும், 3% வட்டி மானியமும் வழங்கப்படும்.

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.21,000ஆகவும் அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.11,500ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என்றும் திரு ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வரும் 2026 ஜனவரி மாதத்திற்குள் 75,000க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் சொன்னார்.

காஞ்சிபுரம் கொடுங்கையூரில் புதிய அனைத்துலக விமான நிலையமும் கோவை மாவட்டத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பல்முனையச் சரக்குப் போக்குவரத்துப் பூங்காவும் அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள், ஏலகிரி, ஏற்காடு மலைப்பகுதிகளில் பெருமழைக் காலங்களில் ஏற்படக் கூடிய இயற்கை இடர்ப்பாடுகள் குறித்து முறையாக ஆய்வு செய்யவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

சுதந்திர தின விழா நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரி, பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்