சென்னை: நீண்டகால இழுபறிக்குப் பிறகு அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடங்கப்பட உள்ளது.
அந்தத் திட்டத்தை சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அர்ப்பணிக்க உள்ளார்.
சென்னையில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை அவர் தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் சு. முத்துசாமி கூறியுள்ளார்.
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பி, அதன் மூலமாக நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மற்றும் விவசாயம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றுவதற்காக தொடங்கப்பட்டதுதான் அத்திக்கடவு - அவிநாசி திட்டம்.
அதற்கு முன்னர், 60 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி 2016ஆம் ஆண்டு அவிநாசியில் பலரும் தொடர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுபோன்ற பல போராட்டங்களுக்குப் பிறகு திட்டம் வடிவம் பெற்றது.
2019 பிப்ரவரி 28ஆம் தேதி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவிநாசிக்கு நேரில் சென்று திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து திட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் தொடர்ந்து வந்தன.
தொடர்புடைய செய்திகள்
நிலம் கையகப்படுத்தலில் ஏற்பட்ட தாமதம் காரணமாக திட்டம் தொடங்குவது தாமதமாகிக்கொண்டே சென்றது.
ஒருவழியாக எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து திட்டம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகச் செயல்பட உள்ளது. மூன்று மாவட்ட மக்களின் மூன்று தலைமுறைக் கனவு நிறைவேற உள்ளது. போதுமான நீர்ப்பாசனம் கிடைக்கும் என்று அந்த மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளனர்.
அந்தத் திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1,045 வறட்சியான நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்லும்.
ஆண்டுதோறும் 1.50 டிஎம்சி நீர், குழாயில் எடுத்துச் செல்லப்படவுள்ளது. அதற்காக, பவானி, நல்லக்கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னுார் ஆகிய 6 இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

