திமுக மாவட்டச் செயலர் கூட்டத்தில் மத்திய அரசுக்கு பாராட்டும் கண்டனமும்

திமுக மாவட்டச் செயலர் கூட்டத்தில் மத்திய அரசுக்கு பாராட்டும் கண்டனமும்

2 mins read
352c7524-09b4-4d50-ad82-1b3719c72508
திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலர். - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மத்திய அரசுக்கு பாராட்டும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சித் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞா் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை காலை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.

மூன்றாவது தீர்மானத்தில், மத்திய அரசுக்குக் கண்டனமும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

அந்தத் தீர்மானம் இதுதான்.

“உறவுக்குக் கை கொடுப்போம் - உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்ற கருணாநிதியின் வழியில் மாநில உரிமைகளைக் காத்திடுவோம்.

“கலைஞர் அவர்களின் புகழினைப் போற்றுகிற வகையில் மத்திய அரசு ரூ.100 மதிப்பிலான தலைவர் கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியிட முன்வந்தமைக்கு இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

“அதேவேளையில், தமிழ்நாட்டுக்கு என்று எந்தச் சிறப்பு திட்டத்தையும் வழங்காமல், முறையான நிதி ஒதுக்கீடு செய்யாமல், ரயில்வே துறையின் திட்டங்களில்கூட மத்திய அரசு பாராமுகமாக நடந்து கொள்கிறது.

“அதனையும் பாரபட்சம் காட்டுவதையும் வழக்கமாக வைத்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மத்திய பாஜக அரசுக்கு இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

“1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திமுக எனும் அரசியல் பேரியக்கம், 75 ஆண்டுகளாக மக்களுக்குப் பணியாற்றி, இந்த 2024-ஆம் ஆண்டு தனது பவள விழா நிறைவினைக் கொண்டாடுகிறது.

“ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முப்பெரும் விழாவோடு இந்தப் பவள விழாவும் எழுச்சி மிகுந்த விழாவாகக் கொண்டாடப்படும் என இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது,” என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்