திருச்சி: திருச்சி அனைத்துலக விமான நிலையத்தில் 46 கிலோ சுறா மீன் துடுப்புகள் மற்றும் ரூ. 6.80 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் ஆகியவற்றை சுங்கத் துறையினா் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) பறிமுதல் செய்தனா்.
திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் புதன்கிழமை இரவு செல்ல இருந்த பயணி ஒருவரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது மூன்று சாக்குப் பைகளில் பதப்படுத்தப்பட்ட 46.58 கிலோ சுறாமீன் துடுப்புகளை அவர் கட்டி வைத்து சிங்கப்பூருக்குக் கொண்டு செல்ல முயன்றதை சுங்கத் துறையினா் கண்டுபிடித்தனர்.
இதேபோல மற்றொரு பயணி உரிய அனுமதியின்றி வைத்திருந்த ரூ. 6.80 லட்சம் மதிப்புள்ள யூரோ நோட்டுகளும் சிங்கப்பூர் வெள்ளி நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
உரிய அனுமதி இன்றி அந்த அளவுக்கு வெளிநாட்டுக்கு ரொக்கப் பணம் கொண்டு செல்வது சட்டப்படி குற்றம்.
பிடிபட்ட பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்துகின்றனர்.