புதுடெல்லி: தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் தங்கியிருக்கும் மதராஸி முகாமில் உள்ள கட்டடங்களை ஜூன் 1ஆம் தேதி இடித்துத் தள்ளுமாறு, புதுடெல்லியின் பொதுப் பணித்துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் மே 9ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.
“பராபுல்லா வடிகால் அடைப்பை முழுமையாகச் சரிசெய்ய மதராசி முகாம் அகற்றம் மிகவும் அவசியம். அந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட பொது நிலம் என்பதால், மறுவாழ்வு உரிமையைத் தாண்டி குடியிருப்பாளர்கள் யாரும் எந்த உரிமையையும் கோர முடியாது,” என்று நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதியில் வசிக்கும் 370 குடும்பங்களில், 189 குடும்பங்கள் மட்டுமே டெல்லி அரசின் சேரி மற்றும் ஜுகி ஜோப்ரி மறுவாழ்வு மற்றும் இடமாற்றக் கொள்கை, 2015ஆம் ஆண்டின் கீழ் மறுவாழ்வுக்குத் தகுதியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால் குடிசைப் பகுதியில் பல பத்தாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து வருபவர்களுக்கு டெல்லி அரசு மாற்றிடம் ஒதுக்கி வருகிறது. ஆனால், மற்றவர்கள் வாடகைக்குத்தான் மாற்று இடம்தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சிறு வயதில், குடும்பத்துடன் இந்த மதராசி முகாமுக்கு வந்த பலர், தங்களது முதுமைக் காலத்தை வேறு எங்கோ சென்று கழிக்க வேண்டியதை நினைத்து பெரும் துயரத்தில் உள்ளனர். பல குடும்பங்கள் அப்பகுதியில் 60 ஆண்டு காலமாக வாழ்ந்து வந்ததாகவும் இப்போது அங்கிருந்து தாங்கள் விரட்டப்படுவதாகவும் கூறுகின்றனர்.

