மே 31 வரை பாம்பன் வழியாகக் கப்பல்கள் செல்லத் தடை

108 ஆண்டு கால பழைய பாம்பன் பாலம் அகற்றப்படுகிறது

2 mins read
dbda94a6-3a3a-47e9-b13f-2a4657a2f9d3
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் தீவை தமிழகத்தின் நிலப்பரப்புடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன பாம்பன் கடலில் உள்ள சாலை, ரயில் பாலங்கள். - படம்: நியூஸ் தமிழ்
multi-img1 of 2

ராமேஸ்வரம்:  நூற்றாண்டுகள் கடந்த பழைய பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தின் மையப்பகுதியை அகற்றும் பணி பிப்ரவரியில் தொடங்குகிறது.

அதனால், மே 31 வரை பாம்பன் கடல் வழியாக கப்பல்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1914 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த 108 ஆண்டுகள் பழைமையான பழைய ரயில் பாலத்தின் உறுதித்தன்மை குறைந்துவிட்டதால் 2022 டிசம்பர் மாதத்தில் ரயில் போக்குவரத்து நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.

இந்தத் தூக்குப் பாலம், பாம்பன் கடல் வழியாக ராமேஸ்வரம் தீவை முக்கிய நிலப்பரப்புடன் இணைக்கிறது. இதன் மையப் பகுதி, கப்பல்கள் செல்வதற்காக திறக்கப்படும். இவ்வழியாக வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும் தெற்கில் இருந்து வடக்கு நோக்கியும் கப்பல்கள் கடந்து செல்வது வழக்கமாகும். 

கடைசியாக, ஜனவரி 20ஆம் தேதி , மையப்பகுதி திறக்கப்பட்டது. அப்போது, இந்திய கடலோரக் காவற்படையின் கப்பல், ஒரு படகு, சில மீனவர்களின் படகுகள் இந்தக் கடல் வழியாக சென்றன.

கப்பல்கள் கடந்து செல்வதை வெளியூர் மற்றும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து புகைப்படங்கள் எடுத்தனர்.

உலகின் இரண்டாவது அதிக உப்புத்தன்மை கொண்ட கடல் பகுதியில் 111 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்ததால், இந்த பாலத்தின் இரும்பு அமைப்புகள் துருப்பிடித்து மிகவும் பலவீனமடைந்துவிட்டன. புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்ட பிறகு, பழைய பாலத்தின் பராமரிப்புப் பணிகள் நிறுத்தப்பட்டதால் பாலத்தின் உறுதித்தன்மை மேலும் குறைந்தது.

மையப் பகுதியின் (ஷெர்சர் ஸ்பான்) இரு பக்கவாட்டு இரும்பு அமைப்புகள், கப்பல்கள் செல்வதற்காக 81 டிகிரி வரை திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதனால், 200 அடி தூரம் வரை கப்பல்கள் செல்ல வழி கிடைக்கும். அதன் கியர் அமைப்பு மிகவும் துருப்பிடித்துவிட்டதால் அண்மையில், 25 பேர் ஒரு மணி நேரம் கடுமையாக உழைத்தும், அதனை 15 டிகிரி மட்டுமே திறக்க முடிந்தது.

ஷெர்சர் ஸ்பானை பிரிக்கும் பணி எளிதானது அல்ல. துருப்பிடித்த இரும்பு அமைப்புகளை வெட்டி எடுப்பது ஒரு சிக்கலான செயல்முறையாகும். கிரேன்கள், பிற கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த வேலை செய்யப்படும். இரும்பு அமைப்புகள் கீழே விழாமல் கவனமாகக் கையாள வேண்டும். மேலும், கடல் பகுதியில் வேலை செய்வதால், வானிலை மாற்றங்களும் ஒரு சவாலாக இருக்கலாம்.

Watch on YouTube
Watch on YouTube
குறிப்புச் சொற்கள்