சென்னை: இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘அரட்டை’ என்ற செயலிக்குத் திடீரென வரவேற்பு அதிகரித்துள்ளது.
இதுவரை அந்தச் செயலியை நாள்தோறும் ஏறக்குறைய 3,500 பேர் பதிவிறக்கம் செய்து வந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 350 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் கோபமடைந்த அமெரிக்கா, இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 50% வரை வரி விதித்துள்ளது.
இந்நிலையில், உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு குடிமக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து, வெளிநாடுகளைச் சேர்ந்த சமூக ஊடகங்களைத் தவிர்த்து, உள்நாட்டுத் தயாரிப்பான அரட்டைச் செயலி பக்கம் பலர் பார்வையைத் திருப்பியுள்ளனர். இதன் காரணமாகவே, அதன் பயனர்கள் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருகிறது. இந்தச் செயலியை ஸோகோ நிறுவனம் உருவாக்கி உள்ளது.
தற்போது இந்தச் செயலியின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தி வருவதாகவும் சிறு குறைகளைச் சரிசெய்து வருவதாகவும் ஸோகோ நிறுவன உரிமையாளர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
மேலும், வரும் நவம்பர் மாதம் ‘அரட்டை’ செயலியில் மேலும் பல புதுமையான அம்சங்களை இணைத்து பெரிய அளவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
“எங்கள் நிறுவனத்திடம் மேலும் பல செயல்திட்டங்கள் உள்ளன. குறிப்பாக அரட்டை செயலியின் பயன்பாட்டைப் பரவலாக்கும் திட்டங்கள் நிச்சயம் செயல்படுத்தப்படும். எனினும், இது தொடர்பாக சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது. அதுவரை பயனர்கள் பொறுமை காக்க வேண்டும். அவர்களின் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்,” என்று ஸ்ரீதர் வேம்பு மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அரட்டை செயலியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பதோடு, இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தற்போது உலகச் சந்தையில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பயன்படுத்தும் பல்வேறு செயலிகளுக்கு மாற்றாக இந்தியாவில் இருந்து புதிய செயலிகள் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.