சென்னை: எந்த நிபந்தனையுமின்றி அதிமுகவில் மீண்டும் இணையத் தயாராக இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தனிக் கட்சி தொடங்குவது, சட்டமன்றத் தேர்தல் கூட்டணி போன்ற அடுத்தகட்ட நகர்வுகள்குறித்து ஆலோசனை நடத்த பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் சென்னை வேப்பேரியில் திங்கட்கிழமை (ஜூலை 14) ஆலோசனை நடத்தினர்.
“அதிமுக. ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதிமுகவின் அனைத்துத் தொண்டர்களும் இணைவதற்கு இபிஎஸ் ஒப்புக் கொண்டால் எந்த நிபந்தனையும் விதிக்காமல் நான் இணைவேன். எனக்கு எந்தப் பதவியும் தேவையில்லை. என்னுடன் இருப்பவர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் பதவி வாங்கிக் கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது,” என்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் கூறினார்.
“வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி எனது தலைமையில் மதுரையில் நடைபெறும் மாநாடு வரலாற்றில் பதிவு செய்யக்கூடிய மாநாடாக இருக்கும். மாநாட்டுக்கு, சசிகலா, டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
“கட்சி தொடங்கிய பிறகு விஜய் இன்று வரை நன்றாகத்தான் செயல்பட்டு வருகிறார். அவரது அரசியல் முடிவுகள் ஜனநாயக ரீதியில் இருக்கிறதா என்பதைப் பொறுத்து அவருக்குத் தார்மீக ஆதரவு வழங்கப்படும்,” என்றும் அவர் கூறினார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில், ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்களைக் கட்சியை விட்டு நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.
அதைத் தொடர்ந்து அதிமுக உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பைத் தொடங்கிய ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் பாஜக கூட்டணியிலிருந்து வருகிறார். தற்போது அதிமுகவும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே தற்கால அமைதியை பாஜக தலைமை வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.