முல்லைப்பெரியாறு வழக்கை மீண்டும் தள்ளிவைத்த உச்ச நீதிமன்றம்

முல்லைப்பெரியாறு வழக்கை மீண்டும் தள்ளிவைத்த உச்ச நீதிமன்றம்

2 mins read
f2855117-b04b-4ec3-8afa-28fc53212a5e
தமிழ்நாடு அரசின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பதிவாளர் நீதிமன்றத்தின் ஆவணச் சரிபார்ப்பு முடிந்த பின்னர் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர். - credit

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிக்கு அருகே கேரள அரசு வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு, ஆவணங்கள் சரிபார்ப்பு நடைமுறைகள் முடிந்த பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, குமுளி அருகே உள்ள ஆனவச்சால் பகுதியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம் அமைக்க கேரள வனத்துறை இடம் தேர்வு செய்தது.

இதை எதிர்த்து, 1886ஆம் ஆண்டு ஒப்பந்த எல்லைக்குட்பட்ட தமிழகப் பகுதிகளைக் கேரள அரசு ஆக்கிரமிப்பதாகக் கூறி, தமிழக அரசு கடந்த 2014ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குரிய பகுதி யாருக்குச் சொந்தமானது என்பதைத் தீர்மானிக்க, இந்திய நில அளவைத்துறை மூலம் விரிவான நில அளவீடு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி தயாரிக்கப்பட்டுத் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையில், கேரள அரசு வாகன நிறுத்துமிடம் கட்ட உத்தேசித்துள்ள பகுதி சர்ச்சைக்குரிய எல்லைக்குள் வரவில்லை என்றும், அது முழுமையாக கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்பே என்றும் இந்திய நில அளவைத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் உமாபதி, “பதிவாளர் நீதிமன்றத்தில் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, அப்பணிகள் முழுமையாக முடிந்த பிறகே வழக்கின் முதன்மை விசாரணையைத் தொடங்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.

தமிழ்நாடு அரசின் இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பதிவாளர் நீதிமன்றத்தின் ஆவணச் சரிபார்ப்பு முடிந்த பின்னர் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

குறிப்புச் சொற்கள்