புதுடெல்லி: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவுக்குத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 3ஆம் தேதி இதுதொடர்பான சில மனுக்களை விசாரித்த மதுரை தனி நீதிமன்ற நீதிபதி, தீபத்தூணில் கார்த்திகை திருநாளன்று தீபமேற்ற உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.
சம்பந்தப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், கோவில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
அந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைக்குத் தடை விதித்தாலும், ஆண்டுதோறும் கார்த்திகை திருநாளன்று திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்தது. இதையடுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
இந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களைச் செவிமடுத்த நீதிபதிகள், தீபத்தூணில் தீபம் ஏற்ற ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்தனர்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்குத் தடை கோரிய தமிழக அரசின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான மனுக்களை முழுமையாக விசாரித்த பிறகே எந்த முடிவும் எடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


