சென்னை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பில் தமிழகத் தலைநகர் சென்னையில் வேல் யாத்திரைப் பேரணி நடத்த அனுமதி வழங்கக் கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரையிலுள்ள திருப்பரங்குன்றம் மலை தொடர்பில் இருவேறு சமயங்களைச் சேர்ந்தவர்கள் கருத்துகளையும் கோரிக்கைகளையும் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனையடுத்து, பாரத இந்து முன்னணி அமைப்பு சென்னையில் ‘வேல் யாத்திரைப் பேரணி’ நடத்த அனுமதி கோரியது. ஆனால், அவ்வமைப்பின் கோரிக்கையைக் காவல்துறை ஏற்கவில்லை.
அதனைத் தொடர்ந்து, பாரத இந்து முன்னணி அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது.
அவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், “திருப்பரங்குன்றம் மலை விவகாரத்திற்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு? திருப்பரங்குன்றம் மலையைக் காக்க சென்னையில் பேரணி நடத்த வேண்டிய தேவை என்ன? தேவையில்லாமல் பிரச்சினையை உருவாக்கப் பார்க்கிறீர்கள்,” எனக் கடிந்துகொண்டு, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஆயினும் மனந்தளராத பாரத இந்து முன்னணி அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அவ்வழக்கு திங்கட்கிழமை (மார்ச் 24) விசாரணைக்கு வந்தது.
அதனை விசாரித்த நீதிபதி பெலா திரிவேதி தலைமையிலான அமர்வு, “சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது. அதில் தலையிட விரும்பவில்லை,” எனக் கூறி, மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது.