கரூர் வழக்கில் விஜய் குற்றவாளி என்பதை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றம்

கரூர் வழக்கில் விஜய் குற்றவாளி என்பதை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றம்

2 mins read
7b9074d6-d93c-440f-9ddb-1e41ea60be47
கரூர் வழக்கு தொடர்பாகப் பொதுவெளியில் பேசியதற்கெல்லாம் சிபிஐ விசாரணை கோருவது சரிதானா என்று நீதிபதிகள்கேள்வி எழுப்பினர். - கோப்புப் படம்: ஃப்ரன்ட்லைன்
Google News Preferred Icon

புதுடெல்லி: கரூர் துயரச் சம்பவத்தில் முதல்வர் விஜய் குற்றவாளி எனக் குற்றஞ்சாட்டப்படுவதை ஏற்க இயலாது என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாகத் திமுக தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கரூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்‌ மாண்டுபோயினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரிக்கிறது.

இந்நிலையில், கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அண்மையில் பேசியிருப்பது அவ்வழக்கின் சாட்சிகளையும் ஆதாரங்களையும் பாதிக்கும் வகையில் இருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அது தொடர்பான நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டுமென்றும் திமுக கோரியுள்ளது.

அந்த மனு விசாரணையின்போது, கரூர் சம்பவம் தொடர்பாக பொதுவெளியில் கருத்து தெரிவிக்கத் தடைவிதிக்க வேண்டுமென்று திமுக கூறியது.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கடந்த திமுக ஆட்சியின்போது கரூர் சம்பவம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் முதல்வர் விஜய்யின் பெயரைக்கூடக் குறிப்பிடவில்லை எனச் சுட்டினர்.

கரூர் வழக்கு தொடர்பாகப் பொதுவெளியில் பேசியதற்கெல்லாம் சிபிஐ விசாரணை கோருவது சரிதானா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இவ்வழக்கில் முதல்வர் விஜய் குற்றவாளி என ஒருதரப்பினர் கூறும் கருத்தை ஏற்க இயலாது என்றனர்.

நீதிபதிகளின் கண்டனத்தையடுத்து, மனுவைத் திரும்பத் பெறுவதாகத் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தள்ளுபடியானது.

குறிப்புச் சொற்கள்