பழனி: திருச்செந்தூர் முருகன் கோவிலை அடுத்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், பழனி முருகன் கோவிலிலும் திங்கட்கிழமை (ஜூன் 8) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கோவிலில் தாம் நேரடியாகக் கண்ட குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அதிகாரிகளை அவர் கண்டித்தார்.
அண்மையில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்றிருந்தபோது அமைச்சர் என்பது தெரியாமல், அவரிடமே தரிசனத்துக்காக பணம் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனவே, இம்முறை அதிகாரிகள் கவனமாக இருந்தனர். எனினும், பக்தர்களுக்கான காத்திருப்போர் கூடத்துக்குள் சென்ற அமைச்சர் ரமேஷ், அங்கிருந்தவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தபோது, பலரும் பல்வேறு புகார்களை எழுப்பினர்.
மின் இழுவை ரயில் நிலையம் செல்ல நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாக பெரும்பாலானோர் கூறினர். மேலும், குடிநீர், சுகாதார வசதிகளும் சரியாக இல்லை என்று பலர் தெரிவித்தனர்.
பக்தர்களுக்குத் தடையின்றி குடிநீர் கிடைக்கவில்லை, போதிய கழிப்பிட வசதிகள் இல்லை என்பது தெரியவந்ததும் அமைச்சர் கோபமடைந்தார்.
சுகாதாரப் பணிகளை ஏன் மேற்கொள்ளவில்லை என அதிகாரிகளிடம் கேள்வி கேட்ட அவர், குடிநீரின் தரத்தையும் சோதித்துப் பார்த்தார்.
காத்திருப்போர் கூடத்தில் பக்தர்களும் பொதுமக்களும் உட்கார வேண்டிய இடத்தில் தெருநாய்கள் சுற்றித் திரிந்ததையும் அங்கு குப்பைகள் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் ரமேஷ், யாரேனும் நாய்க்கடிக்கு ஆளானால் யார் பொறுப்பு? என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்புடைய செய்திகள்
அதிகாரிகளின் அலட்சியப் போக்கை ஏற்க இயலாது என்ற அவர், இறுதியாக, பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தின் தரம் குறித்து அறிய தானே அதைச் சாப்பிட்டு ஆய்வு செய்தார்.

