சென்னை: சென்னையில் 1.80 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக அண்மைய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
உலகளாவிய கால்நடை மருத்துவச்சேவைகள் நிறுவனமும் சென்னை மாநகராட்சியும் இணைந்து இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டன.
இது தொடர்பான அறிக்கை மாநகராட்சியிடம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் தெரு நாய்களின் எண்ணிக்கை முந்தைய கணக்கெடுப்பைக் காட்டிலும் இருமடங்காக அதிகரித்துள்ளது என உலகளாவிய கால்நடை மருத்துவச் சேவைகள் நிறுவனத்தின் இயக்குநர் கார்லெட் ஆனி பெர்னாண்டஸ் தெரிவித்தார்.
“கடந்த 1918ஆம் ஆண்டு சென்னையில் சுமார் 57,000 தெரு நாய்கள் இருந்தன. தற்போது அது இருமடங்காக அதிகரித்துள்ளது.
“அதிகபட்சமாக, அம்பத்தூர் பகுதியில் 24,000, மாதவரத்தில் 12,000, ஆலந்தூரில் 5,000 தெரு நாய்கள் காணப்படுகின்றன,” என்று கார்லெட் மேலும் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக சென்னையில் தெரு நாய்கள் தொல்லை தொடர்ந்து அதிகரித்துள்ளது. ஏராளமானோர் வெறிநாய்க்கடிக்கு ஆளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக புகார்கள் அதிகரித்ததை அடுத்து, சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.