சென்னை: சென்னை மாநகராட்சி மண்டலங்களை 15இல் இருந்து 20 ஆக உயர்த்தி கடந்த மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த ஆணையை தற்போது நிறுத்தி வைத்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தற்போது 15 மண்டலங்களில் 200 வார்டுகளை கொண்டுள்ளது. 85 லட்சம் பேர் வசிக்கின்றனர். மாநகராட்சியின் எல்லைகளுக்குள் சட்டப்பேரவையின் 22 தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன. இந்நிலையில், மாநகராட்சி மண்டலத்தின் நிர்வாக எல்லைகளும், சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகளும் தற்போது ஒருசேர அமையவில்லை. இதன் காரணமாக, பல்வேறு நிர்வாகச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அதனால், இப்போதைய மக்கள் தொகை, வாக்காளர் பட்டியல், சாலைப் பட்டியல், சாலை அடர்த்தி மற்றும் வரி மதிப்பீடுகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மாற்றியமைப்பதென அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி தற்போதைய மண்டலங்களின் எண்ணிக்கையை 15 இல் இருந்து, 20 ஆக உயர்த்தி கடந்த மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதற்கு மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசாணையின்படி, மண்டல அங்கீகாரத்தை இழக்கும் மணலி மண்டல மக்கள் பிரதிநிதிகளும் எதிர்த்தனர்.
இந்நிலையில், இந்த அரசாணையை தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, “தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள், மண்டலக்குழு தலைவர்களின் பதவிக் காலம் இருக்கும் வரை, மண்டலங்களில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இப்போதிருக்கும் கவுன்சிலர்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் 2022 ஆம் ஆண்டு தொடங்கி 2027 ஆம் ஆண்டு மார்ச் வரை உள்ளது. அவர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வரும் வரை மண்டலங்களில் மாற்றங்கள் செய்ய முடியாது. அதனால் அந்த அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் 2027 ஆம் ஆண்டுத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன், அந்த அரசாணை அமலுக்கு வர வாய்ப்புள்ளது,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

