பெங்களூரு: இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் இன்போஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான சுதா மூர்த்தி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஐவநல்லூர் கிராமத்தில் கோவில் கட்டியுள்ளார்.
18 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்ட கோவிலின் குடமுழுக்கு விழா கடந்த வாரம் நடைபெற்றது. கிராமத்தில் இரண்டு நாள்தங்கியிருந்து குடமுழுக்கு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
கிட்டத்தட்ட 2,000 பேர் வாழும் அக்கிராமத்தில் மிகப் பழமையான சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நந்தி உட்பட பல்வேறு கடவுள்களின் சிலைகளை, சிறுசிறு குடிசைகளில் வைத்து கிராமத்தினர் வழிபாடு நடத்தி வருகின்றனர். அச்சிலைகள் ஏறக்குறைய 1,500 ஆண்டுகள் பழமையானவை என்றும் பாண்டவர்கள் வழிபட்டுள்ளனர் என்றும் அக்கிராமத்தினர் கூறினர்.
அக்கிராமம் குறித்து நண்பரின் மூலம் தெரிந்துகொண்டதாக அவர் கூறினார்.
“கல்வியை போதித்தல், பிறருக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தல், குளங்கள், கோவில்கள் கட்டுவது உள்ளிட்டவற்றைச் செய்தால்தான் ஒருவரின் வாழ்க்கை முழுமையடையும் என்று அறிஞர்கள் சொல்லுவர். கோவில்கள், குளங்களை மறுசீரமைப்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டதால், புதிதாக கோவில்களைக் கட்ட மறந்து விட்டனர். தற்போது, ஐவநல்லூரில் கோவில் கட்டுவதன் மூலம், எனது ஆசை நிறைவேறியது,’ என சுதா மூர்த்தி கூறினார்.