சென்னை: அமைச்சர்கள் குழுவுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி ஜனவரி 6ஆம் தேதி முதல் நடைபெறும் எனத் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பழைய ஓய்வு ஊதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே அரசு ஊழியர்களின் முதன்மைக் கோரிக்கை.
இதுதொடர்பாக கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என அரசு ஊழியர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சர்கள், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகிய மூவரைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன. அதன்பிறகும் தீர்வு எட்டப்படாததால் அரசு ஊழியர்கள் தரப்பு கடும் அதிருப்தி அடைந்தது.
இந்நிலையில், மூன்று அமைச்சர்களும் திங்கட்கிழமை (டிசம்பர் 22) தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினருடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால், இதிலும் எந்தத் தீர்வும் காணப்படவில்லை எனப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பு தெரிவித்தது.
“அனைத்துச் சங்கங்களையும் அழைத்துப் பேச்சு நடத்தாமல், சில தரப்புக்கு மட்டும் வாய்ப்பு அளித்துள்ளனர். எங்களுடைய கோரிக்கைகளை மீண்டும் தொடக்கம் முதல் தெரிவிக்குமாறு கூறியதைக் கண்டிக்கிறோம்,” என்று அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, அரசுத் தரப்புடனான பேச்சுவார்த்தை முறையாக நடக்கவில்லை, அரசாங்கம் எந்த உத்தரவாதமும் கொடுக்காததால் திட்டமிட்டபடி வரும் 29ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெறும் என அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் அமிர்த குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாதியர்கள் நடத்தி வரும் போராட்டம் ஐந்தாவது நாளாக திங்கட்கிழமை (டிசம்பர் 22) நீடித்தது.
தமிழ்நாடு தாதியர் மேம்பாட்டு நலச் சங்கம் சார்பாக பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைத் தாதியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 18ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, 723 தாதியரை பணி நிரந்தரம் செய்வதாக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பை தாதியர் சங்கம் ஏற்கவில்லை. அவர்களின் போராட்டம் செவ்வாய்க்கிழமையும் நீடித்தது.

