சென்னை: தீபாவளித் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்ய ஏதுவாக மாநிலம் முழுவதும் 16,500 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு தீபாவளித் திருநாள் அக்டோபர் 31ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதனால், சென்னையிலிருந்து ஏராளமானோர் முன்கூட்டியே தங்கள் சொந்த ஊருக்குச் சென்று, பின்னர் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் சென்னை திரும்பக்கூடும்.
இதனையடுத்து, புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமைவரை சிறப்புப் பேருந்துகள் இயக்க வேண்டியதிருக்கும். இதனால், அதிக அளவிலான பேருந்துகள் தேவைப்படும் எனச் சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே அரசின் தேவைக்குத் தனியாரிடமிருந்து பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கப்பட இருப்பதாக மாநிலப் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்த நிலையில், தீபாவளித் திருநாள் காலத்திலும் வாடகைக்குப் பேருந்துகளை எடுத்து இயக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
இதன் தொடர்பில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சனிக்கிழமையன்று (அக்டோபர் 19) ஆலோசனை நடக்கவுள்ளது. அதில், போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் கலந்துகொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கூட்டத்தில், எவ்வளவு பேருந்துகளை எத்தனை நாள்களுக்கு இயக்கலாம், எத்தனை லட்சம் பேர் பயணம் செய்வர் போன்றவை குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அதன்பின்னரே இறுதியாக எத்தனை பேருந்துகள் இயக்கப்படும் என்பது தெரியவரும் என்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.