மதுரை: தமிழகத்தின் அனைத்துத் துறைகளும் ஆய்வு செய்யப்பட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தமிழக அமைச்சர் சி.டி.நிர்மல் குமார் சனிக்கிழமை தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய் நியமித்த ஒன்பது அமைச்சர்களில் நிர்மல்குமாரும் ஒருவர். இருப்பினும், அவர்களில் யாருக்கும் தமிழக வெற்றிக்கழக. அரசு இன்னும் துறைகளை ஒதுக்கவில்லை.
ஆய்வுசெய்யப்பட்டதும் துறைகளின் குறைநிறைகளை வகைப்படுத்தி வெள்ளையறிக்கை வெளியிடப்படும் என்று அமைச்சர் நிர்மல் மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு, முந்தைய திமுக அரசு மாநில கருவூலத்தைக் காலி செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார் முதல்வர் விஜய்.
மேலும் தமிழகத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார். “முந்தைய அரசு, எங்களுக்கு ஒரு மிகப்பெரிய நிதிச் சுமையை விட்டுச் சென்றுள்ளது,” என்று அவர் பதவியேற்ற பிறகு தனது முதல் உரையில் கூறியிருந்தார்.
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தத்தமது தொகுதிகளுக்குத் திரும்பிவிட்டனர் என்றார் நிர்மல் குமார்.
மேலும், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதச் சுரங்கம் மற்றும் கல்குவாரித் தொழில், மதுபானக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள ‘டாஸ்மாக்’ பார்களில் நடக்கும் முறைகேடுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்பட்டு வருவதாகவும், தவெக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் நிர்மல் உறுதியளித்தார்.

