புதுக்கோட்டை: ஜனவரி 4ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அச்சமயம் அவர் தமிழகத்தில் பாஜக இடம்பெறும் அதிமுக தலைமையிலான கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் எனக் கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் மெல்ல சூடுபிடித்து வருகிறது. காங்கிரஸ், பாஜக ஆகிய இரு முக்கியக் கட்சிகளும் தங்கள் கூட்டணியைப் பலப்படுத்தும் முயற்சிகளை வேகப்படுத்தி உள்ளன.
இந்நிலையில், புதுக்கோட்டையில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டம் அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் பிரசாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
மதுரையில் தொடங்கி, பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று அவர் பிரசாரம் மேற்கொண்டார். இந்தப் பிரசாரப் பயணத்தின் நிறைவு விழா ஜனவரி 4ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அன்றைய தினம் திருச்சிக்கு வருகைதரும் அமைச்சர் அமித்ஷா, அங்கிருந்து புதுக்கோட்டைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது பயணம் உறுதியாகும் பட்சத்தில், அவர் திருச்சியில் தமிழக பாஜகவின் கூட்டணிக் கட்சிப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, தமிழகத் தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த காங்கிரஸ் முன்னாள் எம்பி முடிவு செய்துள்ளார்.
நிர்வாகிகளின் மனநிலையை அறிந்து, அதற்கேற்ப கூட்டணி குறித்து அவர் முடிவெடுக்க உள்ளதாக தமிழக ஊடகச் செய்தி தெரிவித்தது.
நீண்ட காலமாக காங்கிரசும் திமுகவும் கூட்டணியில் உள்ளன. இரு கட்சிகளும் தற்போது இணக்கமாக இருப்பதாகக் கருதப்பட்டாலும் அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்டு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி அண்மையில் சந்தித்துப் பேசியது திமுக வட்டாரங்களில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், ஆட்சியில் பங்கு, தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் பிரமுகர்கள் திமுக தலைமைக்கு நிபந்தனை விதிப்பதுபோல் பொதுவெளியில் பேசுவது விரிசலை மேலும் பெரிதாக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரவீன் சக்கரவர்த்தி தமிழக அரசின் கடன் சுமை குறித்து உத்தரப் பிரதேச மாநிலத்துடன் ஒப்பிட்டு விமர்சித்திருந்தார்.
இதனால் தவெகவும் காங்கிரசும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் காங்கிரஸ் நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்திக்க உள்ளனர். அதன் பிறகு முக்கியமான அறிவிப்புகள் வெளியாகக்கூடும்.
இந்நிலையில், திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே எந்தவிதமான பிணக்கும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி இண்டியா கூட்டணியில் நீடிப்பதாகக் குறிப்பிட்டார்.
தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை திமுக தலைவரும் காங்கிரஸ் தலைவரும் முடிவு செய்வர் என்றார் அவர்.
“ஆட்சியில் பங்கு, தொகுதிப்பங்கீடு குறித்து இரு தலைவர்களும் பேசி எடுக்கும் முடிவே இறுதியானது. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை,” என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

