தென் மாவட்டங்களில் குறைந்த வாக்கு விகிதம்

தென் மாவட்டங்களில் குறைந்த வாக்கு விகிதம்

1 mins read
ea655629-64d3-4c13-9695-b32e0a03e5b1
வாக்களிக்க வரிசையில் நிற்கும் கோவை மாவட்ட வாக்காளர்கள். தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026ல் 90 விழுக்காட்டுக்கும் அதிகமாக வாக்குகள் பதிவான மாவட்டங்கள் அனைத்தும் மேற்கு மண்டலமான கொங்கு பகுதிகளிலேயே உள்ளன. - படம்: கோயம்புத்தூர் நியூஸ்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 23) ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.

இந்தத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத சாதனையாக 85.15 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநிலத்திலேயே மிக அதிகமாக கரூர் மாவட்டத்தில் 92.63 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகியுள்ளன. சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் வாக்குப்பதிவு 90 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது.

இருப்பினும், தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகியவற்றில் வாக்குப்பதிவு 80 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருந்தது.

மொத்தமுள்ள 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இது 2021 தேர்தலைவிட ஏறக்குறைய 25 லட்சம் கூடுதலான வாக்காளர்கள் ஆகும்.

ஆனால், கடந்த ஐந்துத் தேர்தல்களின் புள்ளிவிவரங்களை ஒப்பிடும்போது, கூடுதல் வாக்காளர்களின் எண்ணிக்கை இம்முறை குறைவாகவே உள்ளது.

2006ஆம் ஆண்டு தேர்தலில் 52 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்தனர்.

2011ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களித்தோர் எண்ணிகை 2006ஆம் ஆண்டைவிட 27 லட்சம் அதிகம்.

2016ல் வாக்களித்தோர் எண்ணிகை 2011ஆம் ஆண்டைவிட 66 லட்சம் அதிகம்.

2021ஆம் ஆண்டு தேர்தலில் 2016ஆம் ஆண்டைவிட கூடுதலாக 37 லட்சம் பேர் வாக்களித்தனர். 2026ல் அந்த எண்ணிக்கை 25 லட்சமாகச் சரிந்துள்ளது.

வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்திருந்தாலும், ஒவ்வொரு தேர்தலிலும் வழக்கமாக உயரும் கூடுதல் வாக்காளர்களின் எண்ணிக்கை இந்தத் தேர்தலில் எதிர்பார்த்த அளவை எட்டவில்லை.

குறிப்புச் சொற்கள்