மருத்துவ சுற்றுலாவில் முன்னோடியாகத் திகழும் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. அதிக எண்ணிக்கையிலான அனைத்துலக சுகாதார சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதால், தமிழகம் எப்போதும் நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான முக்கிய மையமாக இருந்து வருவதாக அம்மாநிலச் சுற்றுலாக் கழகம் கூறுகிறது.
இதற்கான காரணங்களையும் அது பட்டியலிட்டுள்ளது.
எண்கள் விவரிக்கும் கணக்குகள்
1664ஆம் ஆண்டு: இந்த ஆண்டுதான் வெள்ளையர்கள் தங்களின் படை வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க, சென்னைக் கோட்டையில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினர். இந்தியாவின் முதல் அரசு மருத்துவமனை இதுவாகும்.
2,700 படுக்கை வசதிகள்: கோட்டையில் ஏற்பட்ட இட நெருக்கடி காரணமாக, கோட்டைக்கு வெளியே மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது ஏறக்குறைய 2,700 படுக்கை வசதிகளுடன் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதுதான் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை.
116,733: கடந்த 2022ஆம் ஆண்டுத் தரவுகளின்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை இது.
10 லட்சம்: தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை.
48: தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் எண்ணிக்கை. நூற்றுக்கணக்கான தனியார் சிறப்பு மருத்துவமனைகளும் உள்ளன
400: மருந்து உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை.
15 லட்சம்: தமிழகத்திற்கு ஆண்டுதோறும் சுற்றுலா வருபவர்கள் எண்ணிக்கை 28 கோடி பேர். இதில் 15,00,000 பேர் மருத்துவச் சிகிச்சைக்காக மட்டும் சுற்றுலா வருகிறார்கள்.
84: மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை.
4 மருத்துவ முறைகள்: ஆயுர்வேதம், சித்தா, ஆங்கில, யுனானி மருத்துவம் ஆகிய நான்கு மருத்துவ முறைகளை தமிழக அரசு அங்கீகரித்துள்ளது.
ரூ.6,000 முதல் ரூ.60,000 வரை சிகிச்சைக் கட்டணம்: பிற நாடுகளோடு ஒப்பிடப்படும்போது தமிழகத்தில் நவீன சிகிச்சைக் கட்டணம் மிக மிகக் குறைவு.
எடுத்துக்காட்டாக, இந்தியாவின் அண்டை நாடான பங்ளாதேஷில் முக்கியமான ஸ்கேன் எடுக்க ரூ.60,000 வரை செலவாகிறது. ஆனால், தமிழ்நாட்டில் 6,000 ரூபாயில் அப்பரிசோதனையைச் செய்துவிடலாம்.
தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடுதான் ஒட்டுமொத்த இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. மேலும், பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஆயிரக்கணக்கான மருத்துவப் பயிற்சியாளர்களைப் பெற்றுள்ள மாநிலம் என்ற பெருமையும் தமிழகத்துக்கு உள்ளது.
சிறந்த மருத்துவ உள்கட்டமைப்பு உள்ள மாநிலம்
மருத்துவச் சுற்றுலாவுக்கு நாட்டிலேயே ஆகச் சிறந்த உள்கட்டமைப்பு உள்ள இந்திய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு முதன்மையான இடம் கிடைத்துள்ளது.
மருத்துவச் சுற்றுலாவின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக சுற்றுலாத் துறை, மாநிலத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளுடன் இணைந்து, தமிழ்நாடு சுற்றுலா வளாகத்தில் மருத்துவச் சுற்றுலாத் தகவல் மையத்தையும் சென்னை, மதுரையில் பயண மேசைகளையும் நிறுவியது.
மருத்துவ நிபுணர்களைக் கொண்ட ஒரு முக்கியக் குழுவும் மருத்துவக் கல்வி இயக்ககமும் அந்தக் குழுவையும் இதர நடவடிக்கைகளையும் மேற்பார்வையிடுகிறது என சுற்றுலாக் கழகத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படிப் பல்வேறு சலுகைகள், கனிவான விருந்தோம்பல், நவீன மருந்துகள், நவீன நோய்க் கண்டுபிடிப்பு இயந்திரங்கள் தமிழகத்தில் உள்ளதால், சுற்றுலாவுக்குச் சுற்றுலாவும் ஆயிற்று, நவீன சிகிச்சைக்கு சிகிச்சையும் வந்ததுபோல் ஆயிற்று எனப் பல நாட்டு மக்களும் தமிழகம் செல்கிறார்கள்.
மருத்துவச் சுற்றுலாவுக்கான முதல் மாநாடு
இந்தக் காரணங்களை முன்வைத்துதான் தமிழகத்தின் முதல் மருத்துவச் சுற்றுலா மாநாட்டை மாநில அரசு இரு ஆண்டுகளுக்கு முன்பே நடத்த உத்தரவிட்டது.
தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாப் பிரிவில் மருத்துவச் சுற்றுலாவும் ஒன்று எனத் தமிழக அரசு அப்போது தெரிவித்தது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மருத்துவச் சுற்றுலாவிற்காக மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, மொரீஷியஸ், மாலத்தீவுகள், பங்ளாதேஷ், நேப்பாளம், சவூதி அரேபியா, ஓமான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், குறிப்பாக பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் ஆண்டுதோறும் மருத்துவ சிகிச்சை பெறும் திட்டத்துடன் இந்தியாவுக்கு வருகிறார்கள். அவர்களில் கணிசமானோர் தமிழ்நாட்டுக்கு வருபவர்களாக உள்ளனர்.
இவ்வாறு அதிக நோயாளிகள் வரக்கூடிய 21 நாடுகள் அடையாளம் காணப்பட்டு, அந்நாடுகளைச் சேர்ந்த ஏராளமான பிரதிநிதிகள் பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறந்த மருத்துவர்கள், தூதரக அதிகாரிகள், காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மருத்துவச் சுற்றுலா மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆகக் குறைவான விலையில் மருந்துகள்
பல்வேறு நிபுணத்துவம் வாய்ந்த சிகிச்சைகளை இந்தியாவில் பெற முடியும் என்ற நம்பிக்கை வெளிநாட்டவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அதேசமயம், மருத்துவத்துறையில் நிகழும் குற்றச் செயல்கள், மோசடிகள், சில அரசு மருத்துவமனைகளின் நிலை, பணம் பறிக்கும் தனியார் மருத்துவமனைகள் ஆகியவை கவலைக்குரிய விஷயங்களாக உள்ளதையும் மறுப்பதற்கில்லை.
“கொரோனா தொற்றுப் பாதிப்பின்போது இந்தியாவின் மருத்துவப் பங்களிப்பை உலக நாடுகள் மறந்திருக்க வாய்ப்பில்லை. வளர்ந்த நாடுகள் பலவற்றைவிட இந்தியாவில் மருந்துகளின் விலை மிகக் குறைவு. இந்திய அரசு இந்த விலையைக் கொடுக்க முடியாத ஏழை, வசதி குறைந்த மக்களுக்காக மேலும் தள்ளுபடி விலையில் மருந்துகளை விற்கிறது. அதேபோல் தமிழக அரசும் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கி ஆகக் குறைவான விலையில் மருந்துகளை விற்பனை செய்கிறது,” என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.