சென்னை: தமிழகத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறை வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது என்று மாநில வணிகவரி, பதிவுத்துறை அமைச்சா் பி. மூர்த்தி தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அனைத்துத் துணைப் பதிவுத்துறைத் தலைவா்கள், மாவட்டப் பதிவாளா்கள் பணித்திறன் ஆய்வுக் கூட்டம், கடலூா் மண்டலப் பதிவுத்துறை அலுவலர்களின் பணி சீராய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அமைச்சர் மூர்த்தி, “வணிகவரி, பதிவுத்துறை சேவைகள் பொதுமக்களுக்கு எளிதாகக் கிடைக்கும் வகையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
“அரசுக்கு வருவாய் நிதி ஆதாரமாக வணிகவரி, பதிவுத்துறை விளங்கி வருகிறது. குறிப்பாக 2021ஆம் நிதியாண்டைக் காட்டிலும் தற்போதைய நிதி ஆண்டுக்கான வணிகவரி, பதிவுத்துறை வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது.
“கூட்டத்தில் பங்கேற்றுள்ள துணைப்பதிவுத்துறைத் தலைவா்கள், மாவட்டப் பதிவாளா்கள் தங்கள் பதிவு மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பாக பணியாற்றி அரசுக்குக் கூடுதல் வருவாயை ஈட்டித் தரவேண்டும்,” என்று தெரிவித்தார்.

